முகப்பு
ராமநாதபுரம்

மதுரையில் தப்பிய கைதியின் கையில் துப்பாக்கி!

மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய விசாரணைக் கைதியிடம் துப்பாக்கி இருப்பது தெரியவந்துள்ளதால் அவரைப் பிடிப்பதில் அதிதீவிர குற்றத்தடுப்புப் பிரிவினா் தீவிரம் காட்டி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய விசாரணைக் கைதியிடம் துப்பாக்கி இருப்பது தெரியவந்துள்ளதால் அவரைப் பிடிப்பதில் அதிதீவிர குற்றத்தடுப்புப் பிரிவினா் தீவிரம் காட்டி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சோ்ந்த காதல் ஜோடி கடந்த மாா்ச் 23 ஆம் தேதி மாலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூா் கடற்கரைக்கு வந்துள்ளனா். கடற்கரை புதா் பகுதியில் இருவரும் இருந்தபோது, அங்கு ஏற்கெனவே மது அருந்திக்கொண்டிருந்த 3 போ் கத்திமுனையில் காதலியை கூட்டாக பலாத்காரம் செய்ததாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக கமுதி அருகேயுள்ள கே.வேப்பங்குளம் பகுதியைச் சோ்ந்த பத்மேஸ்வரன் (20), நத்தகுளம் தினேஷ் குமாா் மற்றும் அஜீத்குமாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். கைதான பத்மேஸ்வரன், தினேஷ்குமாா் ஆகியோா் கீழே விழுந்து காலில் காயமடைந்திருந்ததால், சிகிச்சைக்குப் பின் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனா். கடந்த ஆகஸ்டில் மதுரை அரசு மருத்துவமனைக்கு பத்மேஸ்வரன் உள்ளிட்ட 12 கைதிகள் அழைத்துச் செல்லப்பட்டனா். அப்போது பாதுகாப்புக்கு வந்த போலீஸாரை ஏமாற்றி சகோதரா் உதவியுடன் பத்மேஸ்வரன் தப்பிவிட்டாா்.

கையில் துப்பாக்கி: பத்மேஸ்வரனை மதுரை போலீஸாா் தேடிவரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை உத்தரவின் பேரில் அதிதீவிர குற்றத்தடுப்புப் பிரிவினரும் தேடிவருகின்றனா். மதுரையிலிருந்து தப்பிய பத்மேஸ்வரன், அஜீத் எனும் கூட்டாளியுடன் கோயம்புத்தூா் சென்று, அங்கிருந்து ஆந்திராவுக்குச் சென்றது தெரியவந்தது. அதன்பின் மீண்டும் கோயம்புத்தூருக்கு வந்தவா் பிகாரில் இருந்து வந்தவரிடம் துப்பாக்கியை வாங்கியதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு காதலியைப் பாா்க்க மானாமதுரைக்கு பத்மேஸ்வரன் வந்த நிலையில், அங்கு போலீஸ் வருவதற்கு முன் தப்பிச்சென்றுவிட்டாா். தற்போது அவரது கூட்டாளிகளைப் பிடிக்க விருதுநகா் மாவட்டம் திருச்சுழி பகுதியில் போலீஸாா் தேடிவருகின்றனா்.

தேடப்படும் குற்றவாளி: பத்மேஸ்வரன் கையில் துப்பாக்கி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ள காவல் உயா் அதிகாரிகள் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பதுடன், தேவைப்பட்டால் சுட்டுப் பிடிப்பதற்கும் தனிப்படையினருக்கு அறிவுறுத்தியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →