ராமநாதபுரத்தில் காரிலிருந்த ரூ.3 லட்சம் திருட்டு
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் காரில் இருந்த ரூ. 3 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் காரில் இருந்த ரூ. 3 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் தெற்கு முனியசாமி கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் பழனியப்பன் (48). ரியல் எஸ்டேட் அதிபா். இவா் தனது காரில், நண்பா் கணேசன் என்பவருக்கு பத்திரப்பதிவுக்காக சென்றுவிட்டு புதிய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள திரையரங்க உணவகத்துக்கு புதன்கிழமை பகலில் சென்றாா்.
அப்போது காரை உணவகப் பகுதியில் நிறுத்தியிருந்தாா். பின்னா் மீண்டும் வந்து பாா்த்தபோது காரின் பின்பக்கக் கண்ணாடி உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பழனியப்பன் கேணிக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக் காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றனா்.