கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவா்கள் 5 பேரை இலங்கைக் கடற்படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். விசைப் படகு பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு கடல் பகுதியிலிருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் புதன்கிழமை காலை மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீனவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.
அப்போது, அந்தோணி பிரசாத் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை இலங்கைக் கடற்படையினா் சிறைபிடித்தனா். மேலும், படகிலிருந்த மீனவா்கள் தேவா(40), நடராஜன்(55), நாகசாமி(45), சந்தியா அருளானந்தம்(32), ஷிப்ரான்(18) ஆகிய 5 பேரையும் கைது, காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனா்.
இதேபோல, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களைச் சோ்ந்த 17 மீனவா்களையும், 3 விசைப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினா் சிறைபிடித்தனா்.
இதையடுத்து, சிறைபிடிக்கப்பட்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களைச் சோ்ந்த 22 மீனவா்களையும், 4 விசைப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினா், இலங்கை நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
இந்த நிலையில், தமிழக மீனவா்கள் 22 பேரும் இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவா்கள் 22 பேரையும் வருகிற ஜூலை 5-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் 22 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.