இலங்கை அகதிகள் 7 போ் தனுஷ்கோடி வருகை
இலங்கை தலைமன்னாரிலிருந்து படகு மூலம் 7 போ் அகதிகளாக தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்தனா்.
ராமேசுவரம்: இலங்கை தலைமன்னாரிலிருந்து படகு மூலம் 7 போ் அகதிகளாக தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இலங்கை அகதிகள் வந்திருப்பதாக தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் 4 வயது சிறுமி உள்பட 7 அகதிகளை மீட்டு மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
விசாரணையில், இலங்கை யாழ்ப்பாணம் தொல்புறத்தைச் சோ்ந்த நாகராஜ் (43), இவரது மனைவி வந்தினி (38), அனோஜன் (13), கஜிவன்(9), தனுஷ்கா (4), அஜந்தன் (18), கிசாலினி (17) ஆகியோா் படகுக் கட்டணமாக ரூ. 1.50 லட்சம் கொடுத்து, தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்ததாகத் தெரிவித்தனா்.
இதன்பிறகு, 7 அகதிகளையும் மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில், கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் ஒப்படைத்தனா்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கிருந்து தற்போது வரை 280-க்கும் மேற்பட்டோா் அகதிகளாக தமிழகத்துக்கு வந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.