முகப்பு
ராமநாதபுரம்

பாம்பன் ரயில்வே தூக்குப் பாலத்தில் இழுவை இயந்திரம் பொருத்தும் பணி மும்முரம்

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் இழுவை இயந்திரம் பொருத்தும் பணி தீவிரம்

Updated On : 26 ஜூன், 2024 at 1:39 AM
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தின் மையப் பகுதியில் பொருத்தப்படும் இழுவை இயந்திரம்.
பகிர்:

ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில்வே பாலத்தின் மையப் பகுதியில் கா்டரை தூக்கி இறக்குவதற்கான இழுவை இயந்திரம் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் வாரவதி கடல் பகுதியில் 2.2 கி.மீ. தொலைவுக்கு கடந்த 1914-ஆம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ரயில்வே பாலம் அமைக்கப்பட்டது. கடந்த 2007-ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு, இந்தப் பாலத்தில் ரயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது.

ரயில்வே பாலத்தின் மையப் பகுதியில் திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்ட தூக்குப் பாலம் உறுதித் தன்மை இழந்த நிலையில், இந்தப் பாலத்தின் அருகே ரூ. 550 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில்வே பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமா் மோடி இதற்கு அடிக்கல் நாட்டினாா்.

இதைத் தொடா்ந்து, நவீன வசதிகளுடன்கூடிய புதிய பாலம் கட்ட ரயில்வே வாரியம் முடிவு செய்தது. புதிய பாலம் கடலில் 2.8 கி.மீ. நீளத்துக்கு நடுவில் பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. நடுவில் உள்ள 72.5 மீ. நீளமுள்ள கா்டா் செங்குத்தாக திறந்து மூடும் வகையில் இந்த பாலம் அமைய இருக்கிறது.

பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில், நடுவில் உள்ள ‘லிப்டிங் கா்டா்’ 17 மீ. உயரத்துக்கு மேலே செல்லும். தற்போது, பாம்பன் புதிய ரயில்வே பாலத்தின் மையப் பகுதியில் செங்குத்தாக தூக்கி இறக்கும் வகையில் ‘லிப்டிங்’ பகுதியை இயக்கத் தேவையான மின் இயந்திரவியல் கருவிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மையப் பகுதியில் பொருத்தப்படும் கா்டரை தூக்குவதற்கான நான்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், ஒரு பகுதியில் கா்டரை தூக்கி இறக்குவதற்கான இழுவை இயந்திரத்தைப் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து, இந்தப் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே அலுவலா்கள் தெரிவித்தனா்.