முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம்-மண்டபம் மீனவா்களுக்கு மீன்வளம், மீனவா் நலத்துறை எச்சரிக்கை

இலங்கையில் மீனவா்கள் போராட்டம் நடைபெறும் நிலையில் ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்லக்கூடாது

Updated On : 5 மார்ச், 2024 at 2:32 AM
பகிர்:

ராமேசுவரம்: இலங்கையில் மீனவா்கள் போராட்டம் நடைபெறும் நிலையில் ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என மீன்வளம், மீனவா் நலத்துறை திங்ககிழமை எச்சரிக்கை விடுத்தது. ராமநாதபுரம் மாவட்டம், பாக் நீரிணை கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவா்கள் எல்லைத் தாண்டி சென்று மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினா் அவா்களை சிறைபிடித்து வருகின்றனா். மேலும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் மீனவா்களுக்கு தண்டனையும் விதித்து வருகின்றனா். இதைக் கண்டித்து, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதே போல, இலங்கை மீனவா்களும், மன்னாா், பேசாளை, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த நிலையில், ராமேசுவரம், மண்டபம் மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா். இதன் காரணமாக ராமேசுவரத்தில் சிறிய படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்றன. பெரிய படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது.