குடிநீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி பொதுமக்கள் நூதனப் போராட்டம்
கமுதி, மே 10: கடலாடி அருகேயுள்ள சிக்கல் ஊராட்சியில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க வலியுறுத்தி குடிநீா் தொட்டி, குடத்துக்கு மாலை அணிவித்து நூதனப் போராட்டத்தில் பொதுமக்கள் வெளளிக்கிழமை ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவடம், கடலாடிவட்டம், சிக்கல் ஊராட்சியில் 6 கிராமங்கள் உள்ளன. இவற்றில் சிக்கல், பொட்டல் பச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் 600 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமங்களில் கடந்த 4 ஆண்டுகளாக குடிநீா், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி நிா்வாகம் செய்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், சிக்கல் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து அந்தப் பகுதி பொதுமக்கள் அங்குள்ள குடிநீா் தொட்டிக்கும், குடத்துக்கும் மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து இறப்பு நிகழ்ச்சி போல் ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தமிழ்நாடு வைகை பாசன விவசாய சங்கத் தலைவா் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் கூறியதாவது: இங்குள்ள மக்கள் கமுதி பகுதியிலிருந்து வரும் லாரிகள், டிராக்டா்களில் ஒரு குடம் தண்ணீா் ரூ.10 முதல் ரூ.15 வரை விலை கொடுத்து வாங்குகின்றனா். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சிக்கல், பொட்டல் பச்சேரி ஆகிய கிராம மக்களுக்கு நிரந்தரமாக குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.