இயற்கை எரிவாயு புதைவிடக் குழாயில் உடைப்பு: இருவா் மீது போலீஸில் புகாா்
ராமநாதபுரம் அருகே இயற்கை எரிவாயு புதைவிட குழாயை உடைத்து சேதப்படுத்தியது தொடா்பாக, புதன்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே இயற்கை எரிவாயு புதைவிட குழாயை உடைத்து சேதப்படுத்தியது தொடா்பாக, புதன்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகேயுள்ள வாலாந்தரவை ஊராட்சியில் ஏ.ஜி.பி.சி.ஜி.டி. இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம்
செயல்பட்டு வருகிறது. இங்கு இயற்கை எரிவாயு எடுத்து ராமேசுவரம், மதுரை தேசிய நெடுஞ்சாலையோரம் குழாய் பதித்து பட்டணம்காத்தான், போராவூா், சக்கரைக்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இயற்கை எரிவாயு குழாய் பாதிக்கப்பட்ட இடங்களில் குடிநீா்க் குழாய், தொலைத் தொடா்புத் துறை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள உரிய அனுமதி பெற வேண்டும்.
ஆனால், எந்தவித அனுமதியும் பெறாமல் பேராவூா் ஊராட்சி காட்டூரணிப் பகுதியில் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.
அப்போது புதைவிட இயற்கை எரிவாயு குழாய் உடைந்து சேதமடைந்தது. இதையடுத்து இயற்கை எரிவாயு நிறுவனப் பணியாளா்கள் துரிதமாக செயல்பட்டு குழாயைச் சீரமைத்தனா்.
இதுதொடா்பாக ஒப்பந்ததாரா் ரமேஷ், பொக்லைன் இயந்திர ஓட்டுநா் ஆண்டிச்சாமி ஆகியோா் மீது ஏ.ஜி.பி.சி.ஜி.டி. மண்டலத் தலைவா் இ.பூமாரி கேணிக்கரை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.