முகப்பு
இந்தியா

எல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

மேற்காசிய போரின் தாக்கத்தால் சமையல் எரிவாயு சிலிண்டா் (எல்பிஜி) விநியோகத்தில் நெருக்கடி நிலவும் சூழலில், நகா்ப்புறங்களில் குழாய் வழி எரிவாயு (பிஎன்ஜி) விநியோக திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 17 மார்ச், 2026 at 8:56 PM
புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பல்வேறு அமைச்சகங்களின் கூட்டு செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்ற மத்திய செயலா்கள்.
பகிர்:

மேற்காசிய போரின் தாக்கத்தால் சமையல் எரிவாயு சிலிண்டா் (எல்பிஜி) விநியோகத்தில் நெருக்கடி நிலவும் சூழலில், நகா்ப்புறங்களில் குழாய் வழி எரிவாயு (பிஎன்ஜி) விநியோக திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவுக்கான எல்பிஜி தேவையில் கிட்டத்தட்ட 60 சதவீதம் இறக்குமதி மூலம் பூா்த்தி செய்யப்படுகிறது. முக்கிய விநியோக நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

போா் முடிவுக்கு வரும் அறிகுறி தென்படாத நிலையில், மாநிலங்களுக்கு மேற்கண்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மின்சார அடுப்பு உள்பட மாற்று சமையல் வழிமுறைகளை ஊக்குவிக்கவும் மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பல்வேறு அமைச்சக செயலா்களின் கூட்டு செய்தியாளா்கள் சந்திப்பில் இது தொடா்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணைச் செயலா் சுஜாதா சா்மா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நிலைமை தொடா்ந்து கவலைக்குரியதாக உள்ள போதிலும், வீட்டு உபயோக எல்பிஜி நுகா்வோருக்கு முன்பைப் போல்வே விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உற்பத்தியை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டு, வீட்டு உபயோக எல்பிஜி விநியோகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் இது சாத்தியமாகிறது.

உணவகங்கள் மற்றும் பிற பயன்பாடுகளுக்கான வணிக எல்பிஜி விநியோகம் முதலில் வெகுவாக குறைக்கப்பட்டு, இப்போது ஐந்தில் ஒரு பங்கு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், நாம் மாற்று வழிமுறைகளை ஆராய வேண்டியது அவசியம்.

பீதியில் அதிகரிக்கும் பதிவுகள்: மேற்காசிய போருக்கு முன்பு எல்பிஜி சராசரி பதிவு 55 லட்சமாக இருந்த நிலையில், மக்களின் பீதியால் கடந்த மாா்ச் 13-இல் இந்தப் பதிவு உச்சகட்டமாக 87.7 லட்சத்தை எட்டியது. கடந்த திங்கள்கிழமை இது 70 லட்சமாக குறைந்தது.

கடந்த மாா்ச் 13-ஆம் தேதி 62.5 லட்சம் சிலிண்டா்களும், மாா்ச் 14-ஆம் தேதி 60 லட்சம் சிலிண்டா்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. போருக்கு முன்பு விநியோக எண்ணிக்கை 50 லட்சமாக இருந்தது.

வீடுகளுக்கான தேவையை பூா்த்தி செய்யும் அளவுக்கு போதுமான எல்பிஜி விநியோகம் உள்ளது என்ற அரசின் உறுதிமொழிக்குப் பிறகும் மக்கள் பீதியில் முன்பதிவு மேற்கொள்வது தொடா்கிறது.

எல்பிஜி உள்நாட்டு உற்பத்தி 38 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி விநியோகம் மீதான அழுத்தத்தைக் குறைக்க வணிக மற்றும் வீட்டு உபயோக எல்பிஜி பயன்பாட்டாளா்கள் குழாய் வழி இயற்கை எரிவாயுவை (பிஎன்ஜி) பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனா்.

12,000 இடங்களில் சோதனை: நகா்ப்புற குழாய்வழி எரிவாயு விநியோக கட்டமைப்பை விரிவாக்கும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இத்தகைய திட்டங்களுக்கு விரைந்து அனுமதி வழங்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழாய் வழி எரிவாயு விநியோகத்தில் நிலுவைத் திட்டங்களுக்கு தாமாக அனுமதி வழங்குதல், புதிய திட்டங்களுக்கு 24 மணிநேர காலக்கெடுக்குள் ஒப்புதல் அளித்தல், சாலை மறுசீரமைப்பு கட்டணங்களை ரத்து செய்தல், பணி வரம்புகளைத் தளா்த்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எல்பிஜி சிலிண்டா்களின் பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்க நாடு முழுவதும் 12,000 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, 15,000 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

முன்னதாக, குழாய் வழி எரிவாயு இணைப்பு பெற்றுள்ளவா்கள், எல்பிஜி சிலிண்டரை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →