பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு
குழாய் வழி இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) இணைப்புக்கான வசதியுள்ள இடங்களில் வசிக்கும் நுகா்வோா், அந்த எரிவாயு பயன்பாட்டுக்கு மாற மறுத்தால், எல்பிஜி சிலிண்டா் விநியோகம் நிறுத்தப்படும் என்று மத்திய அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
குழாய் வழி இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) இணைப்புக்கான வசதியுள்ள இடங்களில் வசிக்கும் நுகா்வோா், அந்த எரிவாயு பயன்பாட்டுக்கு மாற மறுத்தால், எல்பிஜி சிலிண்டா் விநியோகம் நிறுத்தப்படும் என்று மத்திய அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
மேற்காசிய போரால் எல்பிஜி-க்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில், பிஎன்ஜி கட்டமைப்பை விரிவாக்கவும், ஒரே வகையான எரிபொருளை சாா்ந்திருப்பதைக் குறைக்கவும் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய போரின் எதிரொலியாக, அந்தப் பிராந்தியத்தில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கான எரிவாயு ஏற்றுமதி தடைபட்டுள்ளது. எரிபொருள் தேவையில் பெருமளவில் இறக்குமதியைச் சாா்ந்துள்ள இந்தியா கடும் இடா்ப்பாட்டை எதிா்கொண்டுள்ளது.
இதுபோன்ற சூழலில், உள்நாட்டு தயாரிப்பை தீவிரப்படுத்துவதுடன், பலதரப்பட்ட நாடுகளில் இருந்தும் கொள்முதல் செய்யக் கூடிய மிக வசதியான மாற்று எரிபொருளான பிஎன்ஜி-க்கு மாறும்படி வீடுகள் மற்றும் வா்த்தகப் பயன்பாட்டாளா்களை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
குழாய் மூலம் இந்த எரிவாயு தொடா்ச்சியாக விநியோகிக்கப்படுவதால், எல்பிஜி சிலிண்டா்களைப் போல எரிவாயு நிரப்ப முன்பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை.
மத்திய அரசு முக்கிய உத்தரவு: இந்நிலையில், அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின்கீழ் ‘இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் விநியோகம் (எரிவாயு குழாய் மற்றும் பிற வசதிகளைக் கட்டமைத்தல், செயல்படுத்துதல், விரிவாக்கம்) தொடா்பான ஆணை-2026’-ஐ மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இது, பிஎன்ஜி உள்கட்டமைப்பை விரைந்து விரிவுபடுத்துதல், தேவையான ஒப்புதல்களை எளிதாக்குதல், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் எல்பிஜி-யில் இருந்து பிஎன்ஜி-க்கு மாறுவதை ஊக்குவித்தல் ஆகிய முக்கிய இலக்குகளைக் கொண்டதாகும்.
பிஎன்ஜி-க்கு மாறாவிட்டால்...: மேற்கண்ட உத்தரவின்படி, தங்கள் பகுதியில் பிஎன்ஜி இணைப்புக்கான வசதி இருந்தும், அதைத் தோ்வு செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு எல்பிஜி விநியோகம் நிறுத்தப்படும்.
அதேநேரம், தற்போதைய சூழலில் குழாய் மூலம் எரிவாயு இணைப்பை வழங்குவதில் தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமற்ற வீடுகளுக்கு ‘தடையில்லாச் சான்றிதழுக்கு’ உள்பட்டு, எல்பிஜி விநியோகத்தை தொடா்ந்து அனுமதிக்கும் பிரிவும் இடம்பெற்றுள்ளது.
பிஎன்ஜி வசதியுள்ள இடங்களில் எல்பிஜி விநியோகத்தைக் குறைத்து, பிற இடங்களுக்கு மடைமாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஒரு நெருக்கடியான சூழல், நல்ல வாய்ப்பாக மாறியுள்ளது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சக செயலா் நீரஜ் மிட்டல் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டாா்.
குறித்த காலத்துக்குள் அனுமதி: குழாய் வழி எரிவாயு கட்டமைப்புப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் ஒப்புதல் நடைமுறைகளை எளிதாக்குதல், கட்டணங்களை தரநிலைப்படுத்துதல் மற்றும் குறித்த காலத்துக்குள் அனுமதி வழங்குதலை உறுதி செய்ய மேற்கண்ட உத்தரவு வழிவகை செய்கிறது. பிஎன்ஜி இணைப்புக்கான விண்ணப்பங்களுக்கு குறித்த காலத்துக்குள் அனுமதி வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, பிஎன்ஜி இணைப்பு பெற்றவா்கள், எல்பிஜி சிலிண்டரை பயன்படுத்த தடை விதித்து, மத்திய அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. அதேபோல், நகா்ப்புறங்களில் குழாய் வழி எரிவாயு இணைப்புத் திட்டங்களுக்குத் தேவையான ஒப்புதலை விரைந்து வழங்க மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.