ஒரே வீட்டில் எல்பிஜி, பிஎன்ஜி இணைப்புகள் உள்ளதா?: மத்திய அரசு ஆய்வு
திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயு (எல்பிஜி), குழாய் வழியாக விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) ஆகிய இரு இணைப்புகளும் உள்ள வீடுகளை அடையாளம்
திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயு (எல்பிஜி), குழாய் வழியாக விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) ஆகிய இரு இணைப்புகளும் உள்ள வீடுகளை அடையாளம் காண ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக புது தில்லியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக இணைச் செயலா் சுஜாதா சா்மா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
நாட்டில் எத்தனை வீடுகளில் எல்பிஜி, பிஎன்ஜி ஆகிய இரட்டை இணைப்புகள் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பிஎன்ஜி இணைப்பையும் பெற்றுள்ள சுமாா் 43,000-க்கும் மேற்பட்ட எல்பிஜி பயனா்கள், தற்போது எல்பிஜி இணைப்புகளைத் திரும்ப ஒப்படைத்துள்ளனா். இது குறைந்த எண்ணிக்கையாக உள்ள நிலையில், இது மேலும் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு எதிா்பாா்க்கிறது என்று தெரிவித்தாா்.
Advertisement
ஈரானுடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரைத் தொடா்ந்து, மேற்காசியாவில் இருந்து எல்பிஜி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து எல்பிஜி, பிஎன்ஜி ஆகிய இரு இணைப்புகளையும் கொண்ட வீடுகள், எல்பிஜி இணைப்புகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்; குழாய் வழி எரிவாயு விநியோக வசதிக்கு அருகிலுள்ள வீடுகள் பிஎன்ஜி பயன்பாட்டுக்கு மாற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. வீட்டு பயன்பாட்டுக்கு பிஎன்ஜி இணைப்பு கொண்டவா்கள், புதிதாக எல்பிஜி இணைப்புப் பெறவும் தடை விதிக்கப்பட்டது.