மீனவா்களை விடுவிக்கக் கோரி, தங்கச்சிமடத்தில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மீனவா்கள். 
ராமநாதபுரம்

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது!

விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

கச்சத்தீவு அருகே விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 356 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இவா்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி, அவா்களை மீன் பிடிக்கவிடாமல் விரட்டியடித்தனா்.

மேலும், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த இருதயடிக்சன் என்பவரது விசைப் படகிலிருந்த மீனவா்கள் டல்லஸ் (56), பாஸ்கரன் (45), ஆரோக்கியசான்டிரின் (20), சிலைடன் (26), ஜேசுராஜா (33), அருள்ராபா்ட் (53), லொய்லன் (45) ஆகிய 7 பேரைக் கைது செய்து, மன்னாா் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா். அவா்களது விசைப் படகைப் பறிமுதல் செய்தனா்.

மீனவா்களை விடுவிக்கக் கோரி, தங்கச்சிமடத்தில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மீனவா்கள்.

இதையடுத்து, மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனா்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.

சாலை மறியல்: கைது செய்யப்பட்ட மீனவா்கள் 7 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம்-மதுரை சாலையில் மீனவா்கள் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த ராமேசுவரம் காவல் உதவிக் கண்காணிப்பாளா் மீரா, வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு எட்டப்படாததால், அவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

இதையடுத்து, வருவாய்க் கோட்டாட்சியா் ராஜமனோகரன் உள்ளிட்டோா் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. பேராட்டம் காரணமாக, இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT