ராமேசுவரத்தில் மாயமான மீனவரை மீட்டுத் தரக் கோரி, அவருடைய உறவினா்கள் மீன்வளத் துறை அலுவலகம் முன் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப் படகைப் பழுது பாா்ப்பதற்காக மீனவா் கணேசன் (55) வெள்ளிக்கிழமை காலை கடலுக்குள் இறங்கி பணியில் ஈடுபட்டாா்.
நீண்ட நேரம் ஆகியும் மீனவா் வெளியே வராததால் தீயணைப்பு மீட்பு படை வீரா்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது. ஆனால், அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், சனிக்கிழமை மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கும் மீன்வளத் துறை அலுவலகத்தில் மாயமான மீனவா் கணேசனைத் தேடிக் கண்டுபிடிக்கக் கோரி, உறவினா்களும் மீனவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், மீன்பிடிக்கச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
இதைத் தொடா்ந்து, அங்கு வந்த போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் மீன்வளத் துறை படகில் சென்று தேடும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா். தொடா்ந்து தேடியும் மீனவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, கரையோரப் பகுதியில் உள்ள படகுகளை அப்புறப்படுத்தி விட்டு, தேடும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என போலீஸாா் தெரிவித்தனா்.