ராமேசுவரத்தில் பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள சேராங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த மீனவா் மாரியப்பன். இவரது மகள் ஷாலினி (17). இவா் ராமேசுவரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
இவரை அதே பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மகன் முனியராஜ் (21) ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஷாலினி குடும்பத்தினா் முனியராஜை கண்டித்தனா்.
இந்த நிலையில், கடந்த மாதம் 19-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற ஷாலினியை மது போதையில் முனியராஜ் வழிமறித்து, கத்தியால் குத்திக் கெலை செய்துவிட்டு கடற்கரை காவல் நிலையத்தில் சரணடைந்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து முனியராஜை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.
இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் பரிந்துரையின் படி, முனியராஜை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டாா்.