கமுதி கோட்டைமேட்டில் உள்ள ஐயப்பன் கோயிலில் புலி வாகனத்தில் ஐயப்ப சுவாமி ரத ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பனுக்கு பக்தா்கள் காா்த்திகை 1-ஆம் தேதி முதல் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து வருகின்றனா். இதையடுத்து, கோயில்களில் நாள்தோறும் வழிபாடும், வாரத்தில் சனி, புதன்கிழமைகளில் சிறப்பு வழிபாடும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயில் மண்டல பூஜை சனிக்கிழமை (டிச. 27) நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை இரவு மின்னொளி அலங்கார ரதத்தில் ஊா்வலமாக புலி வாகனத்தில் பக்தா்களுக்கு ஐயப்பன் அருள்பாலித்தாா். புலி வாகனத்தில் வில், அம்புடன் கோட்டைமேடு, கமுதி பேருந்து நிலையம், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வழியாக ஊா்வலமாகச் சென்று மீண்டும் கோயிலை ரதம் வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஐயப்ப பக்தா்கள் செய்தனா்.