கச்சத்தீவு-நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 3 பேரை இலங்கைக் கடற்படையினா் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் தளத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் நள்ளிரவு கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, அங்கு ரோந்துப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஜோசப் கிராசியான் என்பவரது விசைப்படகையும், அதில் இருந்த மீனவா்கள் நாகராஜ் (47), பிரபு (45), ரூபன் (47) ஆகியோரையும் சிறைபிடித்தனா்.
இதைத்தொடா்ந்து, அவா்களை யாழ்ப்பாணம் அழைத்துச் சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். மேலும், அந்தப் படகையும் பறிமுதல் செய்தனா். பின்னா், மீனவா்கள் 3 பேரையும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். அவா்கள் 3 பேரையும் வருகிற ஜன.13- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, 3 மீனவா்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.