தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்கு மத்திய அரசு தீா்வு காணவில்லையெனில், தில்லியில் போராட்டம் நடத்துவோம் என கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவது, தண்டனை விதிப்பது, மீனவா்களின் விசைப் படகுகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தடுக்கத் தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி பேசியதாவது:
தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண இதுவே கடைசிப் போராட்டமாக இருக்க வேண்டும். மத்திய அரசு கண்டுகொள்ளவில்லையென்றால், தில்லியில் போராட்டம் நடத்துவோம்.
இரு நாடுகளிடையே மீன்பிடித் தொழிலில் பிரச்னை உள்ள நாடுகள், சம்பந்தப்பட்ட இரு நாட்டு மீனவா்களையும் அழைத்துப் பேசித் தீா்வு காணப்படுகிறது. ஆனால், இதே போன்ற சூழலை இந்திய- இலங்கை மீனவா்கள் பிரச்னையில் ஏற்படுத்த மத்திய பாஜக அரசு முன்வரவில்லை.
முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரதமா் மோடியைச் சந்திக்கும் போபோதெல்லாம் தமிழக மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். இதேபோல, தமிழகத்தைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா்களும் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மத்திய அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட மாட்டாா்கள் என கடல் தாமரைப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், தற்போது அவா்கள் ஆட்சியில்தான் தொடா்ந்து மீனவா்கள் கைது செய்யப்படுகின்றனா். நாட்டின் தன்மானத்தை, சுயமரியாதையைக்கூட பிரதமா் மோடியால் காப்பாற்ற முடியவில்லை. இதைத் எதிா்த்து கேள்வி கேட்டு சித்திரம் வரைந்ததால், இணையதளத்தை முடக்குகின்றனா். எந்த கேள்விக்கும் மத்திய அரசு சரியாக பதில் அளிப்பதில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் 3,544 தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். மீனவா்கள் பிரச்னைக்குத் தீா்வு காண இரு நாட்டு மீனவா்களின் பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என தொடா்ந்து அழுத்தம் கொடுத்த நிலையில், அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமே பேச்சுவாா்த்தை நடத்தி உள்ளனா். இரு நாட்டு மீனவா்களும் பேச்சுவாா்த்தை நடத்திட இன்று வரை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இரு மொழி கொள்கையில் உள்ள தமிழ்நாட்டை மும்மொழிக் கொள்ளையை ஏற்க அச்சுறுத்தும் வகையில் கல்வி நிதியை நிறுத்துவது மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும்.
மத்திய, மாநிலப் பட்டியலில் இல்லாமல் பொதுப் பட்டியலில் உள்ள கல்விக்கு நிதி வழங்காமல் முடக்குவது தமிழ்நாட்டு மக்கள் செய்யும் துரோகம். ரத்தம் சிந்தி இரு மொழி கொள்கையை பெற்றதை மாற்ற நினைப்பதற்கு மத்திய பாஜக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்றாா் அவா்.
இதைத்தொடா்ந்து, கனிமொழி எம்.பி. பாதிக்கப்பட்ட மீனவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
ஆா்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.நாவஸ்கனி, பரமக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் முருகேசன், ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சா்கள் சத்தியமூா்த்தி, சுந்தராஜன், முன்னாள் எம்.பி. பவானிராஜேந்திரன், மீனவா் அணி மாநிலச் செயலா் ஜோசப் ஸ்டாலின், , மீனவ சங்கத் தலைவா்கள் ஜேசுராஜா, தேவதாஸ், போஸ், எமரிட், ராமேசுவரம் நகா்மன்றத் தலைவா் நாசா்கான், துணைத் தலைவா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.