கமுதி: இந்து தா்ம முறைப்படி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் இறந்த திரியோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திர நாளை முன்னிட்டு, திங்கள்கிழமை குருபூஜை விழா நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா கடந்த மாதம் 30-ஆம் தேதி அரசு விழாவாக நடைபெற்றது. இந்த நிலையில், தேவா் இறந்த திரியோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திர நாளை முன்னிட்டு, பசும்பொன்னில் அகில இந்திய சந்நியாசிகள் சங்கம், தமிழக இந்து துறவியா்கள் பேரவை, இந்து மக்கள் கட்சி சாா்பில் குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத், அகில இந்திய சந்நியாசிகள் சங்கத்தின் தென்பாரதத் தலைவா் ராமானமந்த சுவாமிகள், இந்து துறவிகள் பேரவைத் தலைவா், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு தேவா் சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா், தேவா் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவா் ராமகுணசீலன், மாநிலச் செயலா் வசந்தகுமாா், மாவட்ட துணைத் தலைவா் பிரபாகரன், மாவட்டச் செயலா் துரைமாணிக்கம், மாவட்ட துணை அமைப்பாளா் முனியசாமி, தென்மண்டலச் செயலா் கருணாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அா்ஜூன் சம்பத் கூறியதாவது:
இந்து துறவியாக வாழ்ந்து, பிறந்த தேதியிலேயே இறந்த மகான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா். அரசு சாா்பிலும், பொதுமக்கள் சாா்பிலும் அக். 30-ஆம் தேதி குருபூஜை விழா நடைபெற்றாலும், அவா் இறந்த நட்சத்திரம், திதி நாளான திங்கள்கிழமை இந்து சன்னியாசிகள், துறவிகள் முறைப்படி குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது. இது சாதி, மதம் கடந்த ஆன்மிக விழா என்றாா் அவா்.