ராமநாதபுரம் அருகே சத்திரக்குடியில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது, அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சத்திரக்குடி பகுதியில் ஒரு பிரிவினா் திங்கள்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அடையாளம் தெரியாத நபா்கள் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு அரசுப் பேருந்துகள், மூன்று காா்களின் முன்பக்கக் கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினா். இதுதொடா்பாக சத்திரக்குடி காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஏழு சந்தேக நபா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க மூன்று தனிப் படைகள் அமைக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடா்பாக சமூக ஒற்றுமையை சீா்குலைக்கும் வகையில் செய்திகள் அல்லது பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிா்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.