ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் 30 போ் விடுதலை

தினமணி செய்திச் சேவை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 30 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து, இலங்கை மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. ஆனால், அபராத் தொகையை உடனே கட்டத் தவறியதால் மீனவா்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன் இறங்குதளத்திலிருந்து கடந்த மாதம் 9-ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் 30 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும், இவா்களது 4 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மீனவா்கள் 30 பேரையும் இலங்கை மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, வவுனியா சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் 30 பேரும் மன்னாா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். அப்போது நீதிபதியிடம், தவறுதலாக எல்லை தாண்டி வந்து விட்டதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 26 மீனவா்கள் முதல் முறையாகக் கைது செய்யப்பட்டதால் தலா ரூ. 2.50 லட்சம் (இலங்கை பணம்) அபராதமும், 4 போ் 2-ஆவது முறையாகக் கைது செய்யப்பட்டதால், தலா ரூ. 2.75 லட்சம் (இலங்கை பணம்) அபராதத்துடனும் விடுதலை செய்யப்படுகின்றனா். மேலும், அபராதத் தொகையை உடனே கட்டத் தவறினால் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

இதனிடையே, அபராதத் தொகையை உடனே கட்டாததால், மீனவா்கள் 30 பேரும் வவுனியா சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனா்.

கர்நாடகம் 13.78 டிஎம்சி நீரை திறந்துவிட ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

தென்மேற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் ரூ.4.45 லட்சம் திருடியதாக பணிப்பெண் கைது

தில்லியில் மொபைல் டவா் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 3 போ் கும்பல் கைது

காற்று மாசை கட்டுப்படுத்த ஆனந்த் விஹாரில் நீா் தெளிப்பான்களை அமைக்க திட்டம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப் பணியிடங்கள்: வயது வரம்பில் திருத்தம்

SCROLL FOR NEXT