ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அமைந்துள்ள ஆதிகைலாய ஈஸ்வரா், சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு விழா முதல் கால பூஜையுடன் சனிக்கிழமை தொடங்கியது.
முன்னதாக சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (நவ. 9) இரண்டாம் கால பூஜையும், திங்கள்கிழமை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்று காலை 9 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது. அத்துடன் கால பைரவா், ஸ்ரீ வாராஹி அம்மன், 18 சித்தா்கள், அறுபடை முருகன் சந்நிதிகளில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெறுகிறது.
இந்த விழாவில் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து முக்கிய பிரமுகா்கள், பக்தா்கள் பங்கேற்கின்றனா். இந்த விழாவின் போது சிவனடியாா்கள் ஆன்மிக சொற்பொழிவாற்றுகின்றனா். மேலும் பவளக்கொடி கும்மி கலைக் குழுவினரின் கும்மியாட்டமும் நடைபெறுகிறது.