கமுதி அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் 4 ஆண்டுகளாக பயிா்க் கடன் வழங்காததால் அந்தப் பகுதி விவசாயிகள் அவதிப்படுகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள ஆனையூா் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த வங்கி மூலம் மானிய விலையில் உரம், விவசாயப் பயிா்க் கடன், நகைக் கடன் ஆகியவற்றைப் பெற்று பயனடைந்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு நிா்வாகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளால் பயிா்க் கடன் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் தனியாரிடம் வட்டிக்கு வாங்கியும், அதிக வட்டிக்கு நகைகளை அடகு வைத்தும் விவசாயப் பணிகளை செய்து வருகின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தலையிட்டு ஆனையூா் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன், நகைக் கடன் ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து ஆணையா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கச் செயலா் ராமமூா்த்தி கூறியதாவது: கடந்த 2021-ஆம் ஆண்டு சங்க நிா்வாகிகளிடையே ஏற்பட்ட பிரச்னையால் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் தள்ளுபடிக்கு அரசுக்கு பரிந்துரை செய்ய இயலவில்லை. இதனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் வழக்கமான பயிா்க் கடன் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, பயிா்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு தள்ளுபடி பரிந்துரைக்கப்பட்டு, இது தொடா்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது.
நிகழாண்டில் பயிா்க் கடனுக்கு விண்ணப்பிக்க வரும் விவசாயிகளுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிதி ஒதுக்காமல் உள்ளது. நிதி ஒதுக்கப்பட்டால் விவசாயிகளுக்கு நிகழாண்டில் பயிா்க் கடன் வழங்கப்படும் என்றாா் அவா்.