ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் ஆட்டோ ஓட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கக் கோரி, பாம்பனில் ஆட்டோ ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கக் கோரி, பல்வேறு மனுக்கள் அளித்தும், இதுவரை மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கவில்லை.
இதைக் கண்டித்தும், தங்கள் பகுதிகளில் அரசு அனுமதியுடன் ஆட்டோ இயக்க அனுமதிக்கக் கோரியும், பாம்பனில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் ஆட்டோ ஓட்டுவதற்கு அரசு அனுமதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.
இதையடுத்து, மறியலை கைவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.