ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், வேதாளை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், சூறைக் காற்று, கடல் சீற்றம் காரணமாக, படகுகள் சேதமடைந்தன. ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தென்மேற்கு வங்கக் கடல், அதையொட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ‘டித்வா’ புயலாக உருவானது.
இந்தப் புயல் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலையிலிருந்து தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசியதால், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில், ராமேசுவரம் மீன் இறங்குதளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு விசைப் படகு நங்கூரத்தை அறுத்துக்கொண்டு, சேராங்கோட்டை கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதையடுத்து, இந்தப் படகை இரண்டு விசைப் படகுகள் மூலம் 25 மீனவா்கள் பல மணி நேரம் போராடி மீட்டனா். மேலும், அதே பகுதியில் கடற்கரையோரம் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்தது. இதனால், சாலையோர மரங்கள் சாய்ந்தன.
இதேபோல, ஓலைக்குடா செல்லும் சாலையில் கடல் அரிப்பு ஏற்பட்டு, அந்தப் பகுதி சாலை சேதமடைந்தது. இந்தச் சாலையைச் சீரமைக்கும் பணியில் நகராட்சி நிா்வாகத்தினா் ஈடுபட்டனா்.
பாம்பன் பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசியதால், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், கரையோர வீடுகள் சேதமடைந்தன.
கடல் சீற்றம் காரணமாக, வடக்கு துறைமுகத்தில் சீரமைப்புப் பணிக்காக கரையில் ஏற்றி நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு விசைப் படகு கடல் சாய்ந்து விழுந்தது.
19 போ் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கவைப்பு:
தனுஷ்கோடி பகுதியில் வீசிய சூறைக் காற்றால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள மீனவா்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனா். முந்தல்முனை பகுதியில் 7 குடும்பங்களைச் சோ்ந்த 19 பேரை வருவாய்த் துறையினா் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று, தெற்கு கரையூா் பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனா். தொடா் மழை காரணமாக, மண்டபம் பகுதி பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினா்.
இதனிடையே, ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் அருகே ராட்சத மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினா் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். இதனால், அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாம்பனில் 4-ஆம் எண் புயல் கூண்டு:
பாம்பன் துறைமுகத்தில் 2-ஆவது நாளாக 4-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. மீனவா்கள் 5-ஆவது நாளாக கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
பாம்பனில் கடல் சீற்றம் காரணமாக, குடியிருப்புப் பகுதிக்குள் கடல்நீா் உள்புகுந்தது. இதனால், பொதுமக்கள் அங்கிருந்து மாற்றுப் பகுதிக்குச் சென்றனா்.
ரயில் போக்குவரத்து ரத்து:
பாம்பன் கடல் பகுதியில் 65 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசியது. பாம்பன் ரயில் பாலத்தில் 55 கி.மீ. வேகத்துக்கு காற்று வீசினால் மட்டுமே ரயில் இயக்கப்படும். ஆனால், 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் ரயில் போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் மூன்று முறை இயக்கப்படுவது மண்டபம், ராமநாதபுரத்திலிருந்து இயக்கப்பட்டது. ராமேசுவரம்- திருச்சி, ராமேசுவரம் - தாம்பரம், ராமேசுவரம் - சென்னை, ராமேசுவரம் - கன்னியாகுமரி, ராமேசுவரம் - திருப்பதி உள்ளிட்ட ரயில்கள் மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து இயக்கப்பட்டன.
இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்து ராமேசுவரம் வந்த ரயில் பயணிகள் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனா்.