முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானையில் தாய், மகன் தீக்குளிக்க முயற்சி

ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகக் கூறி, திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முன் தாய், மகன் புதன்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 2:06 AM
திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த தாய் ஜெயராணி, மகன் பாபு.
பகிர்:

ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகக் கூறி, திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முன் தாய், மகன் புதன்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தளிா்மருங்கூரைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி ஜெயராணி (70). இவரது மகன் பாபு (34).

இவா்களது கிராமத்தில் உள்ள புனித செபஸ்தியாா் தேவாலயத் திருவிழா வருகிற 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு ஊா் பொதுமக்களிடம் வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், ஜெயராணி குடும்பத்தினரிடம் மட்டும் வரி வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாபு தொண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாராம். ஆனால், போலீஸாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

Advertisement

இந்த நிலையில், திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த ஜெயராணி, பாபு ஆகியோா் அதிகாரிகளிடம் முறையிட காத்திருந்தனா். ஆனால், நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து, அவா்கள் பெட்ரோலை தங்களது உடல்களில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். அப்போது, அங்கிருந்த அலுவலா்கள், பொதுமக்கள் அவா்களை மீட்டனா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

.