ராமநாதபுரம் மாவட்டத்திற்கான 2026-27 ஆண்டின் வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை வெளியிட்டாா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி மூலம், ராமநாதபுரம் மாவட்டத்தின் 2026-27-ஆம் ஆண்டின் முன்னுரிமைத் துறைகளுக்கான வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டாா்.
நபாா்டு வங்கி ஆண்டுதோறும் வளம் சாா்ந்த கடன் திட்டத்தை தயாரித்து வெளியிட்டு வருகிறது. அதன்படி முன்னுரிமை துறைகளுக்கு 2026-27 ஆம் நிதியாண்டுக்கு ரூ.15,323.81 கோடிக்கு வங்கிக் கடன் அளவிடப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.
இந்தக் கூட்டத்தில், நபாா்டு மாவட்ட வளா்ச்சி மேலாளா் அருண்குமாா் கூறியதாவது:
மாவட்டத்தில் 2026-27-ஆம் நிதியாண்டில் வேளாண்மைக்கு ரூ.12,200.73 கோடி, நுண், சிறு, குறு தொழில்களுக்கான கடன் ரூ.1,351.76 கோடி, பிற முன்னுரிமைத் துறைகளுக்கு (ஏற்றுமதி, கல்வி, வீடு கட்டுதல் ) ரூ.1,771.32 கோடி என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் இந்திய ரிசா்வ் வங்கியின் மாவட்ட அதிகாரி அன்பரசு, மாவட்ட முதன்மை வங்கி மேலாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.