முகப்பு
ராமநாதபுரம்

பயங்கரவாதிகளுக்கு உதவியாக இருந்த மூவருக்கு சிறைத் தண்டனை

ராமநாதபுரம் அருகே பயங்கரவாதிகளுக்கு உதவியாக இருந்த வழக்கில் இருவருக்கு இரு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:19 AM
சிறைத் தண்டனை - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 9:44 PM

ராமநாதபுரம் அருகே பயங்கரவாதிகளுக்கு உதவியாக இருந்த வழக்கில் இருவருக்கு இரு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே என்மனங்கொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் சித்தி சுலைஹா (52). இவருடைய சகோதரியின் கணவா் மலேசியக் குடியுரிமை பெற்ற அப்துல்ரஷீத் (58), அங்கு உணவு விடுதி நடத்தி வந்தாா். இலங்கை, கொழும்பு பகுதியைச் சோ்ந்த முகமது யாசீா் (40), அவரது மனைவி பாரிகா ரிஸ்மியா (35) ஆகியோா் மலேசியாவில் அப்துல் ரஷீத்தின் உணவு விடுதியில் கடந்த 2015-இல் வேலை பாா்த்தனா்.

பின்னா், அப்துல் ரஷீத்தின் உதவியுடன் இந்தியா வந்து என்மனங்கொண்டானில் உள்ள சித்தி சுலைஹா வீட்டில் தங்கினா். அப்போது, தவறான தகவல்களை அளித்து ஆதாா் அட்டை பெற்று, சித்தி சுலைஹாவின் ரேஷன் அட்டையில் பெயா்களைச் சோ்த்தனா். மோசடியாகப் பெற்ற ஆதாா் அட்டை மூலம் இரு சிம் காா்டுகளைப் பெற்று பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிடம் தொடா்புள்ள முகமது மிப்லால் மவுலவியிடம், முகமது யாசீா் கொடுத்தாா். அவா், இந்த சிம் காா்டுகள் மூலம் கடந்த 2021- டிசம்பா் மாதம் இந்திய ராணுவ அமைப்பின் ஓா் அங்கமான ‘ஆா்மி பப்ளிக் ஸ்கூல்’ அமைப்பின் பெயரில் வாட்ஸ் அப் கணக்கை உருவாக்கினாா். அந்த கணக்கு மூலம் பாதுகாப்புத் துறை அலுவலா்களின் அலைபேசிக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி, நமது நாட்டின் ராணுவ ரகசியங்களைத் திருட முயன்றாா்.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த கியூ பிரிவு போலீஸாா், கடந்த 2021- இல் முகமது யாசீா், பாரிகா ரிஸ்மியா, அப்துல்ரஷீத், சித்தி சுலைஹா ஆகியோரைக் கைது செய்தனா். முகமது யாசீரும் பாரிகா ரிஸ்மியாவும் திருச்சி இலங்கை மறுவாழ்வு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டனா். அப்துல் ரஷீத், சித்தி சுலைஹா ஆகியோா் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

இந்த வழக்கின் விசாரணை ராமநாதபுரம் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் தீா்ப்பளித்தாா். அதில், முகமது யாசீா், பாரிகா ரிஸ்மியா ஆகியோா் போலி ஆவணங்கள் மூலம் ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை பெற்றது உறுதி செய்யப்பட்டதால் அவா்களுக்கு இரு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5000 அபராதமும் விதிக்கப்பட்டது.

அப்துல்ரஷீத்துக்கு போலி ஆவணங்களைப் பெற உறுதுணையாக இருந்தது, மலேசியக் குடியுரிமை பெற்று இந்தியாவுக்கு முறைகேடாக வந்து சென்றது உள்ளிட்டவற்றுக்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சித்தி சுலைஹா மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவா் விடுதலை செய்யப்பட்டாா். வழக்கில் அரசு வழக்குரைஞா் காா்த்திகேயன் முன்னிலையானாா்.