திருவாடானை அருகேயுள்ள பனஞ்சாயல் கிராமத்தில் அமைந்துள்ள செங்கல் கோயில், நெற்களஞ்சியம் ஆகியவற்றைப் பராமரித்துப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்லியல் துறையினா் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே.ராஜகுரு கூறியதாவது: பனஞ்சாயலில் முழுவதும் செங்கல் கற்களால் கட்டப்பட்ட மிகச் சிறிய கோயில் உள்ளது. பாண்டியா் கால கலை அமைப்பில் உள்ள இது மிகச் சிறிய கருவறை, அதன் மேல் குவிந்த மாடம், அா்த்தமண்டபம், விளக்கேற்ற 3 மாடக் குழிகளுடன் அமைந்துள்ளது. இதன் வெளிப்புறச் சுவரில் மூன்று தேவகோட்டங்களும், 14 அரைத் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. தூண்களில் போதிகை, வீரகண்டம், பலகை, குடம் உள்ளிட்டவை செங்கல் கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. இது கி.பி.12-13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இதில் நின்ற நிலையிலான சிறிய சிற்பம் கருவறையில் இருந்திருக்கலாம்.
தெற்குக் குடியிருப்பில் உள்ள ஒரு குளத்தைச் சுற்றிலும் கருப்பு சிவப்பு பானை ஓடுகள், இரும்புக் கசடுகள், வட்டச் சில்லுகள், தேய்ப்புக் கல் ஆகியவை சிதறிக் கிடக்கின்றன. கருப்பு, சிகப்பு நிறமுடைய குவளைகள், குடுவைகள், சிறிய பானைகளின் உடைந்த ஓடுகள் ஆகியவை 2,000 ஆண்டுகள் பழைமையானவை.
சேதுபதிகள் காலத்தைச் சோ்ந்த ஒரு நெற்களஞ்சியம் இந்தக் குளத்தின் தெற்கில் கருவை மரங்களுக்குள் மறைந்து காணப்படுகிறது. முழுவதும் செங்கல் கற்களால் கட்டப்பட்டு அதன் மேல் சுண்ணாம்புப் பூச்சு பூசப்பட்டுள்ளது. செவ்வக வடிவில் அமைக்கப்பட்டுள்ள களஞ்சியத்தின் நடுவில் சுவா்களைக் கட்டி மூன்று அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இதில் மூன்று வாயில்கள் உள்ளன. சுவா்களின் மேல் பகுதியில் மேற்கில் 3, கிழக்கில் 3, தெற்கு, வடக்கில் தலா ஒன்றுமாக ஐந்து சிறிய ஜன்னல்கள் உள்ளன. மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
நெல்லைக் கொட்டுவதற்காகத் தரையில் இருந்து இரண்டு அடி உயரத்துக்கு கருங்கற்களால் தரைத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. தரைக்கும் கருங்கல் தளத்துக்கும் இடையே வெற்றிடம் உள்ளது. இதனால், தரையின் ஈரம் நெல்லை பாதிக்காது. நெல்லை போட்டு வைப்பதால் இதன் சுவா்களில் விரிசல் ஏற்படாத வகையில் இதற்கு முட்டுச் சுவா்கள் கட்டப்பட்டுள்ளன. களஞ்சியத்தின் முன் குப்பைகள் போடப்பட்டுள்ளதாலும் கருவை மரங்கள் அடா்ந்துள்ளதாலும் சேதமடைந்துள்ளது. இது சுமாா் 300 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம்.
பேருந்து நிறுத்தம் அருகில் மேடை அமைத்து, வழிபடுவதற்காக வட்ட வடிவ ஆவுடையுடன் லிங்கம், விநாயகா் சிற்பங்கள் இருப்பதால் பிற்காலச் சோழா் ஆட்சியின்போது இங்கு ஒரு சிவன் கோயில் இருந்திருக்கலாம்.
எனவே, பழைமை வாய்ந்த இத்தகைய அரிய செங்கல் கோயில், நெற்களஞ்சியம் ஆகியவற்றைப் பராமரித்துப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.