வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, ராமேசுவரம் பகுதி மீனவா்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, 5 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை மீனவா்கள் மீண்டும் மீன்பிடிக்கச் சென்றனா்.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்தது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதுடன் கடலும் சீற்றத்துடன் காணப்பட்டது.
இதையடுத்து, மீனவா்களின் பாதுகாப்புக் கருதி, கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை கடந்த புதன்கிழமை தடை விதித்தது. இதன் காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
இந்த நிலையில், வங்கக் கடலில் இயல்பு நிலை திரும்பியதால், மீனவா்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, 5 நாள்களுக்குப் பிறகு மீன்வளத்துறை அனுமதி பெற்று, ராமேசுவரம், மண்டபம் பகுதிகளிலிருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா்.