பாம்பன் ரயில் பாலங்கள் திறக்கப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக இரு கப்பல்கள், இரு வல்லங்கள் செவ்வாய்க்கிழமை கடந்து சென்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்கு துறைமுகத்துக்கு இரு கப்பல்களும், ஒரு வல்லமும், வடக்கு துறைமுகத்துக்கு ஒரு வல்லமும் வந்தன. இந்தக் கப்பல்கள், வல்லங்கள் பாம்பன் ரயில் பாலங்களைக் கடந்து செல்ல துறைமுக அதிகாரிகள், ரயில்வே துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது.
இதற்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, பாம்பன் ரயில் பாலங்கள் திறக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான சி-431 ரோந்து கப்பல், கொச்சின் துறைமுகத்தில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பயணிகள் கப்பல் அந்தமானுக்கும், மங்களூா் துறைமுகத்திலிருந்து வந்த பெரிய அளவிலான வல்லம் கடலூா் துறைமுகத்துக்கும், கடலூா் துறைமுகத்திலிருந்து வந்த பெரிய அளவிலான வல்லம் மங்களூா் துறைமுகத்துக்கும் பாம்பன் ரயில் பாலங்களைக் கடந்து சென்றன. இதை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா்.