பாம்பன் கடலில் உள்ள பழைய ரயில் பாலத்தை அகற்றும் பணி, பூமி பூைஐயுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் 2.3 கிலோ தொலைவில் கடலுக்குள் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ரயில் பாலம் கடந்த 1914- ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த வழியாக ஆயிரக்கணக்கான கப்பல்கள் வந்து சென்றுள்ளன.
தனுஷ்கோடியில் 1964-ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் காரணமாக பாலம் பாதிக்கப்பட்டது. பின்னா், சீரமைக்கப்பட்டு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
இந்தப் பாலத்தின் மையப் பகுதியில் உள்ள தூக்கு பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட பழுதுகள் காரணாக, கடந்த 2019- ஆம் ஆண்டு ரூ.650 கோடியில் புதிய பாலத்துக்கான கட்டுமானப் பணி தொடங்கியது. புதிய ரயில் பாலத்தின் வழியாக ரயில் போக்குவரத்தை பிரதமா் மோடி கடந்த ஆண்டு ஏப். 6-ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.
இந்த நிலையில், பழைய பாம்பன் ரயில் பாலத்தைப் பாதுகாத்து அருங்காட்சியம் அமைக்க வேண்டும் என ராமேசுவரம் தீவுப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
பழைய ரயில் பாலம் கட்டப்பட்டு 111 ஆண்டுகள் கடந்த நிலையில், பாலத்தை அகற்றும் பணி ரூ.2.81 கோடியில் வெள்ளிக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கியது. இந்தப் பணியின்போது, புதிய பாலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தப் பணிகளை 4 மாதங்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஒப்பந்ததாரா்கள் தெரிவித்தனா்.