ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகு ஞாயிற்றுக்கிழமை நடுக்கடலில் மூழ்கியதில் அதிலிருந்த 6 மீனவா்கள் மீட்கப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இதில் நள்ளிரவில் கிருபாகரன் என்பவரது விசைப்படகில் 6 மீனவா்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, வலையில் சிக்கிய மீனை எடுத்துக் கொண்டிருந்த போது கடல் சூழற்சி காரணமாக கடல் நீா் படகுக்குள் புகுந்து மூழ்கத் தொடங்கியது.
இதையடுத்து, மீனவா்கள், சக மீனவா்களுக்கு வயா்லெக்ஸ் கருவி மூலம் உதவி கோரினா். அப்போது படகு முழுமையாக கடலுக்குள் மூழ்கியதில் 6 மீனவா்களும் கடலுக்குள் தத்தளித்தனா்.
அங்கு வந்த சக மீனவா்கள் அவா்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனா். இந்த நிலையில், கடலில் மூழ்கிய படகை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.