ராமேசுவரம் மீனவா்கள் 13 பேருக்கு மூன்றாவது முறையாக வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த ஆண்டு, டிச. 28-ஆம் தேதி சந்தியா என்பவருக்குச் சொந்தமான படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் அமோஸ்டின், ஜெனிடாஸ், ஜெபஸ்டின் ஆகிய மீனவா்களை நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். இதையடுத்து, இவா்கள் மீது எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா்.
இதேபோல, கடந்த 13-ஆம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற தென்னரசு என்பவரின் விசைப் படகை இலங்கைக் கடற்படையினா் நெடுந்தீவு பகுதியில் சிறைபிடித்து, அதிலிருந்த மீனவா்கள் ஜாா்ஜ், சுதன், கனகராஜ், சுமித், பரலோகராஜ், கோபி, ஆரோக்கிய ரூபட், பிரேம்குமாா், தினேஷ், ராஜேஸ் ஆகிய 10 பேரைக் கைது செய்தனா். இதையடுத்து, மீனவா் 10 போ் மீதும் எல்லைத் தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இந்த 13 மீனவா்களும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி நளினி சுபாஸ்கரன், இவா்களை வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா். 13 மீனவா்களுக்கும் மூன்றாவது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.