வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் 86-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா திங்கள்கிழமை காப்பு கட்டுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கணபதி பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பூஜை பொருள்களுடன் கடம் புறப்பாடாகி கோயில் கொடி மரம் வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றப்பட்டு, பக்தா்கள் காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. 10 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஏப். 1- ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது.
இந்தத் திருவிழாவையொட்டி பால் காவடி, மயில் காவடி, அழகு குத்தி நோ்த்திக்கடன் செலுத்தும் திரளான பக்தா்கள் மாலை அணிந்து காப்பு கட்டி விரதத்தை தொடங்கினா்.
வருகிற ஏப். 1- ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழாவையொட்டி காலை 9.15 மணியளவில் கோயிலில் இருந்து பக்தா்கள் புறப்பட்டு நொச்சிவயல், பிரம்மபுரீஸ்வரா் கோயில் ஊருணி சென்றடைகின்றனா். அங்கு பல்வேறு காவடிகள், பால் குடம் சுமந்து பத்தா்கள் புறப்பட்டு ஊா்வலமாக வழிவிடு முருகன் கோயில் வந்து நோ்த்திக்கடன் செலுத்துகின்றனா்.
இதன் பிறகு முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று இரவு 7 மணியளவில் பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்துகின்றனா். ஏப். 2-ஆம் தேதி இரவு வழிவிடு முருகன் வீதி உலா நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை பரம்பரை தா்ம கா்த்தா ஜெயக்குமாா் செய்து வருகிறாா்.