முறையூர் அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் முறையூர் கிராமத்தில் புதன்கிழமை மகா சாஸ்தா அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் முறையூர் கிராமத்தில் புதன்கிழமை மகா சாஸ்தா அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திங்கள்கிழமை முதற்கால யாகபூஜை தொடங்கியது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை 2 ஆம் கால யாக பூஜையும், மாலையில் 3 ஆம் கால யாக பூஜையும் நடைபெற்றது. புதன்கிழமை காலை 6 மணிக்கு 4 ஆம் கால யாக பூஜை நடைபெற்று, காலை 9.55 மணிக்கு அய்யனாருக்கும் பெரிய கருப்பர், வீரபத்திரர், சின்னக்கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 10.30 மணிக்கு சாமிக்கு பட்டு சாத்துதல், மகா தீபாராதனை முதலியன நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.
இவ்விழாவில் திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர். பெரியகருப்பன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே. உமாதேவன் மற்றும் காளாப்பூர், எஸ்.எஸ்.கோட்டை, அய்யாபட்டி, ஆலம்பட்டி, மாங்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து திரளான மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முறையூர் கிராமத்தினர் செய்திருந்தனர்.