நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்தவர் உள்பட 2 பேர் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வாடகை தகராறு தொடர்பான வழக்கில் குற்றவாளிக்குப் பதிலாக ஆள்மாறாட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வாடகை தகராறு தொடர்பான வழக்கில் குற்றவாளிக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்தவர், அதற்கு தூண்டிய நபர் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள மானகிரியைச் சேர்ந்த சாமிநாதனின் குடிநீர் நிறுவனத்தை, காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த குலோத்துங்கன் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்நிலையில் குத்தகைப் பணம் சரிவரக் கொடுக்காததால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், குலோத்துங்கனை, சாமிநாதன் தரப்பினர் சிலர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து குலோத்துங்கன் அளித்த புகாரின்பேரில், அவரை தாக்கியதாக காரைக்குடி சண்முகம் மகன் விவேக், சாமிநாதன் மகன் சிவா ஆகியோர் மீது நாச்சியாபுரம் போலீஸார் வழக்குப்பதிந்தனர். அவர்களில் சிவாவை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், சிவாவுக்கு பதிலாக வேறு ஆள் கைது செய்யப்பட்டதாக திருப்பத்தூர் நீதிபதியிடம் குலோத்துங்கன் தரப்பினர் புகார் அளித்தனர்.
இதற்கிடையே நீதிமன்றத்தில் ஆஜரான சிவாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சீனிவாசன் என்ற வேறு நபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆள்மாறாட்டம் செய்த சீனிவாசனை கைது செய்ய நீதிபதி சரவணசெந்தில்குமார் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
உண்மையான குற்றவாளி சிவா, மதுரை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று வெளியில் வந்துள்ளார். இந்த வழக்கில், சீனிவாசனை, சிவாவுக்கு பதிலாக ஆள்மாறாட்டத்துக்கு தூண்டியதாக காரைக்குடி கழனிவாசலைச் சேர்ந்த ராஜாவுக்கு திருப்பத்தூர் நீதிமன்றம் மூலம் விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டது.
அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் நாச்சியாபுரம் சார்பு ஆய்வாளர் சுந்தரி, போலீஸார் ராஜாவை புதன்கிழமை கைது செய்தனர்.