முகப்பு
சிவகங்கை

 தீபாவளி பண்டிகைக்கான ஊக்கத் தொகையை கூடுதலாக வழங்க ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மனு

தீபாவளி பண்டிக்கைக்கான ஊக்கம் மற்றும் செலவுத் தொகையை கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:55 AM
பகிர்:

தீபாவளி பண்டிக்கைக்கான ஊக்கம் மற்றும் செலவுத் தொகையை கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சிவகங்கையில் தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.    
     இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தனிடம் அச்சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனு விவரம்:    
  108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் பணியாற்றி வரும் ஓட்டுநர்கள், அவசர  மருத்துவ உதவியாளர்கள் மற்றும் கால் சென்டர் ஊழியர்களுக்கு, கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது ஊக்கத் தொகையாக ரூ. 4,800 மற்றும் செலவுத் தொகை ரூ.1,500 சேர்த்து ரூ. 6,300 வழங்கப்பட்டது. 
     இந்தாண்டு தீபாவளி பண்டிக்கைக்கு ஊக்கத் தொகையாக ரூ. 7,200, செலவுத் தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி மொத்தம் ரூ.10,200 வழங்கவேண்டும் என, அரசுக்கும், சம்பந்தப்பட்ட ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனத்துக்கும் பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால், இதுவரை எந்தவிதமான பதிலும் வரவில்லை. 
     எனவே, மாவட்ட நிர்வாகம் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிக்கைக்கான ஊக்கம் மற்றும் செலவுத் தொகையை கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.  
 தவறும்பட்சத்தில், நவம்பர் 5 ஆம் தேதி இரவு 8 மணி முதல் நவம்பர் 6 ஆம் தேதி இரவு 8 மணி வரை அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். அதன் பிறகும் நடவடிக்கை இல்லையெனில், அன்றைய தினம் முதல் தொடர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்து பணியாளர்களும் ஈடுபட உள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.