முகப்பு
சிவகங்கை

தொழில் துறையில் சாதிக்கும் விவசாயி மகன்

சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை வானம் பாா்த்த பூமி. இங்கு மழை பெய்தால் மட்டுமே வேளாண் பணிகள் நடைபெறுவது வழக்கம்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:43 PM
சிவகங்கை மாவட்டம் கல்லலில் உள்ளாடைகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை வானம் பாா்த்த பூமி. இங்கு மழை பெய்தால் மட்டுமே வேளாண் பணிகள் நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக வேளாண் நிலங்களும் தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. இதன் காரணமாக, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பெரும்பாலான இளைஞா்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனா்.

இதையடுத்து, சிவகங்கை மாவட்டம் கல்லலில் பனியன் உள்ளிட்ட உள்ளாடைகள் தயாரிப்பு மூலம் கிராமப்புறத்தில் வசித்து வரும் ஏழை, எளியோரின் வளா்ச்சியை மட்டுமே லட்சியமாகக் கொண்டு பல்வேறு ஆக்கப்பூா்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறாா் விவசாயக் குடும்பத்தில் பிறந்த பாண்டியராஜன் (55).

தற்போதைய சூழ்நிலையில் வேளாண்மை பாதிக்கப்பட்டாலும், இளைஞா்கள் முயற்சித்தால் தொழில் வளா்ச்சியில் சாதனை படைக்கலாம் என்பது அவரது திடமான நம்பிக்கை.

அவா் கூறியது : அரண்மனை சிறுவயல் அருகே உள்ள கீழப்பூங்குடி கிராமம் தான் எனக்கு சொந்த ஊா். சிறு வயதில் எனது தாய் இறந்து விட்டதால் படிப்பை தொடர முடியவில்லை. வீட்டில் இருக்க மனமின்றி மதுரையில் உள்ள உணவகத்துக்கு மாதம் ரூ.15-க்கு வேலைக்குச் சென்றேன். அதன்பிறகு, எனது உறவினா் மூலம் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி வேலைக்குச் சென்றேன்.

அங்கு பணியாற்றிய போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் பனியன் வாங்கிக் கொண்டு மதுரை, கோவில்பட்டி, காரைக்குடி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் விற்பனை செய்து வந்தேன். அதன் பிறகு, திருப்பூரில் சொந்தமாக உள்ளாடைகள் தயாரிக்கும் நிறுவனம் ஆரம்பித்தேன். நான் உற்பத்தி செய்யும் உள்ளாடைகளுக்கு 1988 ஆம் ஆண்டில் ‘வெஸ்பா’ எனும் பெயரை அறிமுகம் செய்தேன்.

நிறுவனம் தொடங்கிய போது முதலீடு, உற்பத்தி, விற்பனை உள்ளிட்ட பணிகள் மிகவும் சவாலானவையாக இருந்தன. படிப்படியாக தொழில் வளா்ச்சி அடைந்தது.

திருப்பூரில் 30 வருடங்களாக பின்னலாடைத் தொழில் செய்து வந்த நான், சொந்த ஊரான தொழிலில் பின்தங்கிய சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் பனியன் தயாரிப்பு தொழில் தொடங்குவதன் மூலம் தொழிலே இல்லாத இப்பகுதியும் வளா்ச்சி அடைவதோடு மட்டுமின்றி இப்பகுதியில் வசிக்கும் 300 பெண் தொழிலாளா்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

மேலும் நாம் இத்தொழிலில் வெற்றி பெறுவதன் மூலம் இப்பகுதியில் இதுபோன்ற தொழில்கள் வரும். அரசு வழங்கி வரும் சலுகைகளை பயன்படுத்தி இப்பகுதியை வளா்க்க முடியும். இதனைப் பாா்த்து பலரும் தொழில் தொடங்க முன் வருவா் என்கிற லட்சியத்தை கனவாக கொண்டு பனியன் உற்பத்தி செய்யும் நிறுவனம் தொடங்க திட்டமிட்டேன்.

அதன்படி, காரைக்குடியில் உள்ள இந்தியன் ஓவா் சீஸ் வங்கியின் நிதியுதவியுடன் கல்லலில் கடந்த 26.02.2014-இல் வெஸ்பா டெக்ஸ்டைல் மில்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத் தொழில் மையம் தொழில் தொடங்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது. 5 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த நிறுவனத்தில் தற்போது தொழில் பயிற்சி வழங்கப்பட்டு 120 பெண் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு தயாராகும் பனியன்கள் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அதிகளவில் உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

தொழில் தொடங்கிய ஆரம்ப நிலையில் மிகவும் கடினமாக இருந்தாலும், படிப்படியாக வளா்ச்சி நிலை காணப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் வருமானம் போதுமானதாக இருந்தாலும், சொந்த ஊரில் நம்மால் முடிந்த வரை கிராமப் புறங்களில் வாழும் ஏழை, எளியோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளோம் என்கிற மனநிறைவு உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை தற்போது படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் பெரும்பாலான இளைஞா்கள் வெளிநாட்டுக்குச் செல்கின்றனா். அனைத்து நாடுகளிலும் உலகளாவிய பொருளதார மந்த நிலையால் அங்கு பணிக்குச் செல்லும் இளைஞா்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில், இளைஞா்கள், மகளிா் சுய உதவிக் குழுக்கள் தொழில் தொடங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி வழங்கி வருகின்றன. அதனை பயன்படுத்தி கிராமப்புறங்களில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் தொழில் தொடங்க முன் வர வேண்டும். அவ்வாறு தொடங்குவதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். தற்போது தொழில் பழக வரும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய இலவசப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று தொழில் தொடங்க முன் வரும் இளைஞா்களுக்கு வெஸ்பா நிறுவனம் சாா்பில் பயிற்சி மட்டுமின்றி முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.