உண்டியல் பணத்தை முதல்வர் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரம் தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரம் தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருளாக உண்டியல் வழங்கப்பட்டது.
அதனை பரிசாக பெற்ற எட்டாம் வகுப்பு மாணவி சந்தியா தனது பெற்றோர் வழங்கிய தொகையை சிறுக சிறுக சேமித்து வைத்திருந்தார். இன்று பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுருநாதனிடம் தான் உண்டியல் மூலம் சேமித்து வைத்திருந்த ரூ 1048-ஐ கொடுத்து கரோனா நிவாரண நிதியாக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
தலைமை ஆசிரியர் மாணவியின் தாயார் திருமதி ராஜலெட்சுமியை தொடர்பு கொண்டு தங்களது மகள் சந்தியா உண்டியலில் சேமித்த தொகையை கரோனா நிவாரணமாக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க சொல்கிறார் சம்மதமா என்று கேட்டார்.
தாயாரும் வழங்க உதவி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் மாணவி கொடுத்த சேமிப்பான சில்லறை காசுகளை பெற்று கொண்டு முதல்வர் நிவாரண நிதிக்கு இணையதளம் மூலம் ரூ 1048 அனுப்பி அதற்கான ரசீது பெற்று கொண்டு மாணவி சந்தியாவின் கருணை உள்ளத்தை பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.