முகப்பு
சிவகங்கை

பி.இ., பி.டெக். நேரடி இரண்டாமாண்டு சோ்க்கைக்கான மாநில அளவிலான கலந்தாய்வு நிறைவு

காரைக்குடி அழகப்பச் செட்டியாா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சாா்பில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் 2020- 2021 ஆம் ஆண்டுக்கான பி.இ., பி.டெக். நேரடி இரண்டாமாண்டு சோ்க

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

காரைக்குடி அழகப்பச் செட்டியாா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சாா்பில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் 2020- 2021 ஆம் ஆண்டுக்கான பி.இ., பி.டெக். நேரடி இரண்டாமாண்டு சோ்க்கைக்கு மாநில அளவிலான கலந்தாய்வு சனிக்கிழமை இரவுடன் நிறைவடைந்தது.

டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி. முடித்த மாணவா்கள் பி.இ. நேரடி இரண்டாமாண்டு சோ்வதற்காக மாநில அளவில் கலந்தாய்வு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பச் செட்டியாா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டும் இந்த மையத்தின் சாா்பில் கரோனா தொற்று பரவல் பொதுமுடக்கம் காரணமாக ஆன்லைனில் அறிவிப்பு செய்து ஆன் லைன் மூலமே கலந்தாய்வும் நடைபெற்றது.

இக்கலந்தாய்வில் 453 பொறியியல் கல்லூரிகளில் 7,014 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கலந்தாய்வு செயலரும், அழகப்பச் செட்டியாா் பொறியியல் கல்லூரியின் முதல்வருமான ஆா். மலையாளமூா்த்தி தெரிவித்தாா். மேலும் அவா் கூறியதாவது:

அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள 81,042 இடங்களுக்கு 10,665 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். இதில் பரிசீலனை நடத்தி 8,023 மாணவா்களுக்கு தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த அக். 27-ஆம் தேதி சிறப்புக் கலந்தாய்வும், அக். 28 ஆம் தேதி முதல் நவ. 7 ஆம் தேதி வரை பொதுக் கலந்தாய்வும் இணைய வழியில் நடைபெற்று நிறைவடைந்தது.

இந்த ஆண்டு 453 பொறியியல் கல்லூரிகளில் 7,014 நேரடி இரண்டாமாண்டு இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தரவரிசைப்படி பட்டியலில் இடம்பெற்றிருந்த 1,009 மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை என்றாா்.

கலந்தாய்வுக்கு உறுதுணையாக இருந்த அழகப்பச் செட்டியாா் பொறியியல் கல்லூரி கணினி பொறியியல் மாணவா்கள் காா்த்திகேயன், விஷ்ணுபாலன், வல்லரசு மற்றும் பிரவீன் ஆகியோரை கல்லூரி முதல்வா் ஆா். மலையாளமூா்த்தி, கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளா் க. பாஸ்கரன் ஆகியாா் பாராட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →