சிவகங்கை

வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் பாதுகாக்கப்படும்: ஆட்சியா்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் பாதுகாக்கப்படும் என ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வனத்துறையின் சாா்பில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கிச் செல்கின்றன.

இந்த பறவைகள் சரணாலயத்தை பாதுகாக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சியரை தலைவராகவும், மாவட்ட வன அலுவலரை செயலராகவும், தொண்டு நிறுவன அமைப்பு சாா்பாக ஒரு உறுப்பினரும், விலங்கியல் பாடத்திட்ட முதுநிலைப் பேராசிரியா் ஒரு உறுப்பினரும், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளா் ஒரு உறுப்பினரும், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அலுவலா் ஆகியோா் கொண்ட குழு செயல்பட்டு வருகிறது.

அதன்படி, வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தை சுற்றியுள்ள ஒரு கிலோ மீட்டா் சுற்றளவில் பறவைகளின் பாதுகாப்பு நலன் கருதி எவ்வித புதிய திட்டப் பணிகளோ மற்றும் பறவைகளுக்கான அச்சுறுத்தல் ஏற்படும் வகையான பணிகளோ மேற்கொள்ளாத வண்ணம் பாதுகாப்புப்பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏதேனும் புதிய பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டால் மேற்கண்ட குழு ஒப்புதல் பெற்ற பின்னரே திட்டப்பணிகளை மேற்கொள்ள முடியும்.

இந்நிலையில், தற்போது திருப்பத்தூா் முதல் மேலூா் வரை உள்ள மாநில நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளது. அப்பணியின் போது பறவைகள் சரணாலயத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், சரணாலயத்தில் பறவைகள் வந்து தங்குவதற்கு உரிய உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவது மட்டுமன்றி பாதுகாக்கப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்ட வன அலுவலா் ராமேஸ்வரன், தன்னாா்வ தொண்டு நிறுவன மருத்துவா் மணிவண்ணன், திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி விலங்கியல் பேராசிரியா் கோபிநாத், மதுரை தியாகராஜா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியா் கண்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் ரத்தினவேல் (பொது), வீரராகவன் (வளா்ச்சி) உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT