மானாமதுரை வீர அழகர் கோயில் அருகே காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள்: புனிதத் தன்மை கெடுவதாக பாஜக புகார்
மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயில் அருகே காவல்துறை சார்பில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் அலங்கோலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் கோயிலின் புனிதத்தன்மை கெடுவதாக பாரதிய ஜனதா கட்சி புகார் தெரிவித்துள்ளது
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயில் அருகே காவல்துறை சார்பில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் அலங்கோலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் கோயிலின் புனிதத்தன்மை கெடுவதாக பாரதிய ஜனதா கட்சி புகார் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயில் மூலவர் சுந்தரராஜ பெருமாள் கிழக்கு முகம் நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். உற்சவர் வீர அழகர் எனும் நாமத்துடன் அழைக்கப்படுகிறார். கோயில் உள்பிரகாரத்தில் முன் மண்டபத்தில் மகுடம் தரித்த வீர ஆஞ்சநேயர் தெற்கு முகம் நோக்கி அருள்பாலித்து வருகிறார்.
மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா, ஆடிப் பிரமோற்சவ விழா உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அஞ்சநேயர் சன்னதி முன்பு கோயிலுக்குள் வருவதற்கு தெற்கு வாயில் உள்ளது.
இந்தக் கோயிலுக்கு அருகிலேயே பரமக்குடி- தெ.புதுக்கோட்டை சாலையில் மானாமதுரை நகர் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விபத்துக்குள்ளாகும் வாகனங்கள் மணல் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கடத்துவதாக காவல்துறையால் பறிமுதல் செய்யப்படும் மாட்டு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் ஆஞ்சநேயர் சன்னதி தெற்கு வாயிலை மறித்து அலங்கோலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. இதனால் அந்தப் பகுதியில் கருவேல மரங்கள் வளர்ந்து குப்பைகள் தேங்கி மிகவும் அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் கோயிலின் புனிதத்தன்மை கெடுவதாக பாரதிய ஜனதா கட்சி புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மானாமதுரை கிழக்கு ஒன்றியத் தலைவர் எம். சங்கர சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மானாமதுரை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். மேலும் இது குறித்து சங்கர சுப்பிரமணியன் கூறியதாவது. மானாமதுரை வீர அழகர் கோயிலின் தெற்குப் பகுதி சுற்றுச்சுவர் அருகில் காவல்துறையின் பறிமுதல் வாகனங்கள் ஆஞ்சநேயர் சன்னதி நுழைவயிலை மறித்து அலங்கோலமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு மாட்டுச்சாணம் நிறைந்து கருவேல மரங்கள் வளர்ந்து குப்பைகள் தேங்கி அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் கோயிலின் புனிதத்தன்மை கெடுவதாக விடுவதாக பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பக்தர்கள் கருதுகின்றனர்.
படிக்க | நாடு திரும்ப முடியாமல் வேலூரில் தவிக்கும் நெதர்லாந்து பெண்மணி: ஆட்சியர் அலுவலகத்தில் முறையீடு
கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்தக் காட்சியை பார்த்து வேதனையடைந்து முகம் சுளிக்கும் நிலை உள்ளது. எனவே வீர அழகர் கோயிலின் புனிதத்தன்மை கெடும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காவல்துறை பறிமுதல் வாகனங்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இது குறித்து கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளோம் என்றார்.