சிவகங்கை

மானாமதுரையில் குடிநீரின்றித் தவிக்கும் இலங்கை அகதிகள்: சுண்ணாம்பு படியும் குடிநீரால் அவதி

வி. கருப்பையா


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இலங்கை அகதிகள் முகாமில் நல்ல குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

இங்குள்ள குழாயில் வரும் சுண்ணாம்பு படியும் தண்ணீரைக் குடித்து பலர் கிட்னி பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக புகார் கூறப்படுகிறது. 

மானாமதுரையில் மாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட மூங்கில் ஊருணி பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 180 குடும்பங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 

ஆனால் முகாமில் தேவையான கழிப்பறை வசதிகள் செய்து தரப்படவில்லை. ஏற்கெனவே அமைக்கப்பட்ட கழிப்பறைகளும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால் முகாமில் வசிக்கும் பெண்கள் கழிப்பறை வசதி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் முகாமில் குடிநீர் தேவைக்காக ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டு சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 

இந்தத் தண்ணீர் சுவையாக இருந்தாலும் தண்ணீரை சூடுபடுத்தினால் சுண்ணாம்பு படிவதாகவும், இதனால் முகாமில் இந்த தண்ணீரைப் பயன்படுத்திய பலர் கிட்னி பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முகாமில் வசிக்கும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால் உயிருக்கு பயந்து அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் குழாயில் வரும் தண்ணீரை வெளிப் பயன்பாட்டிற்கு மட்டும் வைத்துக் கொண்டு டேங்கர் லாரிகளில் வரும் குடிநீரை ஒரு குடம் ரூ 10-க்கு வாங்கி குடிக்கவும், சமையல் தேவைக்கும் பயன்படுத்துகின்றனர். 

தங்களுக்கு சுகாதாரமான முறையில் நல்ல குடிநீர் வசதி செய்து தர வேண்டுமென முகாமில் வசிக்கும் மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. 

சமீபத்தில் இந்த முகாமுக்கு அகதிகள் மறுவாழ்வு துறையிலிருந்து ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் மானாமதுரை அகதிகள் முகாமில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்  என வலியுறுத்தினர். அதிகாரிகள் தரப்பிலும் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துச் சென்றனர். ஆனால் இன்றுவரை அதற்கான எந்த ஒரு முன் நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை உள்ளது.

எனவே, இனியாவது அகதிகள் மறுவாழ்வு தறை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மானாமதுரை இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நல்ல குடிநீர் வசதி செய்து கொடுத்து உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டுமென இங்கு வசிக்கும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT