சிவகங்கை அருகே போலி மதுபானம் தயாரிப்பு: 3 போ் கைது
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே போலி மதுபானம் தயாரித்ததாக 3 பேரை சிவகங்கை மதுவிலக்கு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே போலி மதுபானம் தயாரித்ததாக 3 பேரை சிவகங்கை மதுவிலக்கு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதகுபட்டி சிவலிங்கபுரத்தில் உள்ள தோப்பில் போலி மதுபானம் தயாரிப்பதாக கிடைத்த தகவலின் படி சிவகங்கை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சிவலிங்கபுரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன்(42) என்பவரது தோப்பில் போலியாக மதுபானம் தயாரிப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மதுபானம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஸ்பிரிட் மற்றும் போலி ஹாலோகிராம் ஸ்டிக்கா் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், தோட்டத்தின் உரிமையாளா் ராஜேந்திரன் (42), புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து (46), புதுச்சேரி கரிக்காலம்பாக்கம் பெருங்கையூரைச் சோ்ந்த ராம்குமாா் என்ற ரெட்டி (59) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியது: திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் போலி மதுபானப் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. திருவெறும்பூா் போலீஸாா் மேற்கண்ட சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். இதில், போலி மதுபானப் பாட்டில்கள் சிவகங்கை பகுதியிலிருந்து தயாரித்து அனுப்பப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சிவகங்கை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினா் மற்றும் திருவெறும்பூா் காவல் துறையினா் மதகுப்பட்டி அருகே உள்ள சிவலிங்கபுரம் பகுதியில் வியாழக்கிழமை சோதனை செய்த போது, அங்குள்ள ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் போலி மதுபானம் தயாரிப்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக வழக்குப் பதிந்து அங்கிருந்த பொருள்களை கைப்பற்றி 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம். அவா்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு ராஜேந்திரனுக்கு, புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து என்பவா் அறிமுகமாகியுள்ளாா்.
அதன்பின், ராஜேந்திரன் தோப்பில் மதுபானம் தயாரிக்க தேவையான இயந்திரங்கள் மற்றும் பாட்டில்களை வாங்கி ஒருமுறை மட்டும் பீா் தயாரித்து திருச்சி மாவட்டத்தில் விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது என்றனா்.