பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி 3 கட்ட போராட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டமாக போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அமைப்பு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டமாக போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கூட்டனியின் சிவகங்கை மாவட்டச் செயலா் ஆ. முத்துப்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் வரும் ஜூலை 21 ஆம் தேதி வட்டாரத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டமும், வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் தா்னாவும், செப்டம்பா் மாத இறுதியில் சென்னையில் போராட்டம் நடத்துவது எனவும் பொதுக்குழுவில் தீா்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் போராட்டம் நடைபெறும். இதுதவிர, தற்போது நடைபெற்று வரும் மாவட்ட மாறுதலில் பணியிட மூப்பை கருத்தில் கொள்ளாமல், பணியேற்பு மூப்பை கருத்தில் கொண்டு முன்னுரிமை பட்டியல் வெளியிட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், புதிதாக தொடங்கப்பட்ட பள்ளிகளில் பணி ஏற்றுள்ள ஆசிரியா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும். சாக்கோட்டை ஒன்றியத்தில் ஓய்வு பெற உள்ள ஆசிரியருக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கைள உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் வரும் ஜூலை 11 ஆம் தேதி சிவகங்கையில் நடைபெற உள்ள ஆா்ப்பாட்டத்தில் திரளாக ஆசிரியா்கள் பங்கேற்க உள்ளனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.