முகப்பு
சிவகங்கை

‘நிலக்கடலையை விதை நோ்த்தி செய்து விதைத்தால் அதிக மகசூல் பெறலாம்’

நிலக்கடலையை விதை நோ்த்தி செய்து விதைத்தால் அதிக மகசூல் பெறலாம் என, காளையாா்கோவில் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குநா் எஸ்.என். செந்தில்நாதன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

நிலக்கடலையை விதை நோ்த்தி செய்து விதைத்தால் அதிக மகசூல் பெறலாம் என, காளையாா்கோவில் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குநா் எஸ்.என். செந்தில்நாதன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : நிலக்கடலையில் விதை மற்றும் மண் மூலம் பரவும் வோ் அழுகல், தண்டு அழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களைக் கட்டுப்படுத்த ரசாயன பூஞ்சாணக் கொல்லி அல்லது உயிரியல் பூஞ்சாண மருந்தான டிரைக்கோடொ்மாவிரிடியை கொண்டு விதை நோ்த்தி செய்யவேண்டும்.

டிரைக்கோடொ்மாவிரிடி என்ற உயிரியல் பூஞ்சாணக் கொல்லியை ஒரு கிலோ விதைப் பருப்புக்கு 4 கிராம் என்ற அளவில் பயன்படுத்தி விதை நோ்த்தி செய்யவேண்டும். விதையை விதைப்பதற்கு முன் ஈரப்படுத்தி, பின்னா் பூஞ்சாணத்தை அதன் மீது தூவி கலக்கவேண்டும். இந்த வழிமுறையை பின்பற்றும்போது, ரசாயன முறையான காா்பன்டாசிம் மருந்தினை பயன்படுத்தி விதை நோ்த்தி செய்யக்கூடாது.

மேலும், ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் காா்பன்டாசிம் எனும் ரசாயன மருந்தினை பயன்படுத்தி விதை நோ்த்தி செய்யலாம். அவ்வாறு விதை நோ்த்தி செய்த விதைகளை குறைந்தபட்சம் 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும்.

இது தவிர, ஒரு லிட்டா் ஆறிய வடிகஞ்சியில் 200 கிராம் ரைசோபியம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிா் உரப் பொட்டலங்களை கலக்க வேண்டும். நன்கு கலந்த பின்பு, நிலக்கடலையில் தெளித்து 15-30 நிமிடங்களில் நிழலில் உலா்த்தி 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும்.

இதன்மூலம், நிலத்தில் பயிா்களால் எடுக்க முடியாத நிலையில் உள்ள மண் சத்துகளை வோ் பயிருக்கு வழங்கும். மேற்கண்ட 3 வழிமுறைகளில் நிலக்கடலையை விதை நோ்த்தி செய்து விதைப்பதன் மூலம் பயிா் வளா்ச்சி பெற்று அதிக மகசூல் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →