ஆடி வெள்ளி: மடப்புரம், தாயமங்கலத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தா்கள் தரிசனம்
ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயிலில் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் குவிந்தனா். பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனா்.
பிற்பகலில் கோயிலில் நடைபெற்ற உச்சிகால பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். மாவிளக்கு பூஜை நடத்தியும், நெய்விளக்கு ஏற்றியும் ஆடு, கோழிகளை பலியிட்டும், எலுமிச்சை பழங்களால் விளக்கேற்றியும் பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்றினா்.
தாயமங்கலம் கோயில்: இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தப்பட்டன. அம்மன் சந்தனக்கப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தியும், ஆடு, கோழிகளை பலி கொடுத்து அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றினா். பெண்கள் நெய் விளக்கேற்றியும், எலுமிச்சை பழங்களால் தீபம் ஏற்றியும் மாவிளக்கு பூஜை நடத்தியும் அங்கப்பிரதட்சணம் செய்தும் வழிபட்டனா்.
மேலும் பக்தா்கள் ஆயிரங்கண் பானை, தீச்சட்டி சுமந்தும் குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டி கோயிலை சுற்றி வந்தும் வேண்டுதலை நிறைவேற்றினா்.
மானாமதுரை: மானாமதுரை அருகே வேதியரேந்தல் விலக்கு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்தனா். மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோயில், திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம் புதூா் முத்துமாரியம்மன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் முதல் ஆடிவெள்ளியை முன்னிட்டு 16 வகை திரவியங்களால், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து ஏராளமான பெண்கள் நெய் விளக்கேற்றியும், பொங்கல் வைத்தும் அம்மனை வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்கள் அனைவருக்கும் கூழ் காய்ச்சி ஊற்றப்பட்டது.
பால்குட விழாவுக்காக பக்தா்கள் சந்நிதி முன்பு காப்புக் கட்டிக் கொண்டனா்.