வாசுதேவநல்லூர் - தொகுதி அறிமுகம்!
வாசுதேவநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...
தென்காசி மாவட்டத்திலுள்ள 2 ஆவது தனித்தொகுதி வாசுதேவநல்லூர்.
இத்தொகுதியில் உள்ள நெல்கட்டும்செவலில்தான் சுதந்திர போராட்ட வீரர்கள் பூலித்தேவர், ஒண்டிவீரன், வெண்ணிகாலாடி உள்ளிட்டோரின் நினைவிடங்கள் உள்ளன.
இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் மிக பிரசித்தி பெற்ற கோயிலாகும். கோட்டை மலையாறு மற்றும் செண்பகவல்லி அணை இத்தொகுதியில் அமைந்துள்ளன.
இந்தத் தொகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. புளியங்குடி எலுமிச்சை சந்தை தமிழக அளவில் பெரிய எலுமிச்சை சந்தையாக உள்ளது. இங்கிருந்து கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் எலுமிச்சை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சிறு விசைத்தறிகளும் இயங்கி வருகின்றன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு வாசு தேவநல்லூர் தொகுதியில் 1,10,960 ஆண் வாக்காளர்கள், 1,16,396 பெண் வாக்காளர்கள், 13 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,27,369 வாக்களர்கள் உள்ளனர்.
கோட்டைமலையாறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் போதிய குடிநீர் ஆதாரம் இல்லாததால் குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. இதற்கிடையே, பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்வதற்குத் தேவையான தண்ணீரை வழங்கி வந்த சிவகிரி செண்பகவல்லி அணையின் தடுப்புச் சுவரில் உடைப்பு ஏற்பட்டு இரு மாநில பிரச்னை காரணமாக சரி செய்யப்படாமல் இருப்பதால் தண்ணீர் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய பல ஆண்டுகளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இத்தொகுதியில் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்த நிலையில் பல ஆயிரம் விவசாயிகள் பலனடைந்து வந்தனர். பல்வேறு காரணங்களால் அந்த தனியார் சர்க்கரை ஆலை இயங்காததால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே நிலுவை தொகையும் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருப்பது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இத்தொகுதி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி வருவதால் யானை உள்ளிட்ட வன விலங்குகளால் தென்னை, வாழைகரும்பு உள்ளிட்ட பயிர்கள் நாள்தோறும் சேதப்படுத்திப்பட்டு வருகின்றன.
ஆடு, மாடு மேய்ச்சல் தொடர்பாக அவ்வப்பொழுது கால்நடை மேய்ப்பாளர்களுக்கும், அரசுத்துறை அதிகாரிகளுக்கும் பிரச்சனை ஏற்படுவதும் வழக்கமாகியுள்ளது. இதற்கும் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுவருகிறது.
இத்தொகுதிக்குள்பட்ட புளியங்குடியில் எலுமிச்சை சார்ந்த மதிப்புக் கூட்டு பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைத்தால் பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள். இதற்கிடையே, புளியங்குடி எலுமிச்சைக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளதால் அதன் மதிப்பு சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது.
இத்தொகுதியில் ஈஸ்வரன் (காங்கிரஸ், தமாகா) 5 முறையும், கிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), வெள்ளைத்துரை (திமுக), சதன்திரும லைகுமார் (மதிமுக) ஆகியோர் தலா 2 முறையும், துரையப்பா (அதிமுக), மனோகரன் (அதிமுக) ஆகியோர் தலா ஒரு முறையும் வென்றுள்ளனர்.