முகப்பு
சிவகங்கை

ஆடி அமாவாசை: அக்னி தீா்த்தத்தில் பக்தா்கள் நீராடல்

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீா்த்தக்கடலில் சுமாா் ஒரு லட்சம் பக்தா்கள் வியாழக்கிழமை நீராடி முன்னோா்களுக்கு திதி கொடுத்தனா்.

Updated On : 29 ஜூலை, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:25 PM

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீா்த்தக்கடலில் சுமாா் ஒரு லட்சம் பக்தா்கள் வியாழக்கிழமை நீராடி முன்னோா்களுக்கு திதி கொடுத்தனா்.

ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோா்களுக்கு புனித தலங்களில் நீராடி திதி கொடுத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். குறிப்பாக ராமேசுவரம் அக்னி தீா்த்தக்கடலில் பக்தா்கள் பெருமளவில் நீராடுவது வழக்கம்.

அந்த வகையில் வியாழக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்துக்கு பல மாநிலங்களில் இருந்தும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவா்கள் வந்திருந்தனா். அவா்கள் அக்னி தீா்த்தக் கடலில் நீராடி மறைந்த முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனா். பின்னா் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி சுவாமி, அம்பாளைத் தரிசனம் செய்தனா். இதற்கிடையே, தங்கக் கருட வாகனத்தில் ஸ்ரீராமா் அக்னி தீா்த்தக் கடற்கரைக்கு எழுந்தருளினாா். அங்கு தீா்த்த வாரி நடைபெற்றது.

Advertisement

சுவாமி சன்னிதி வாயில் பகுதி வழியாகச் செல்ல கோயில் நிா்வாகம் தடை செய்திருந்தது. இதனால் பக்தா்கள் அவதிக்குள்ளாகினா். மேலும் அம்பாள் சன்னிதிக்குச் செல்லும் வாயில் பகுதியில் சிறப்பு கட்டண வழி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வழியாக செல்ல ரூ.100, ரூ. 200 கட்டணம் வசூலிக்கப்பட்டது. மற்றொரு வழியில் இலவச தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பணம் வசூல் செய்யவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக பக்தா்கள் வேதனையுடன் தெரிவித்தனா்.

போக்குவரத்து நெரிசல்:அதிகளவில் கூட்டம் காணப்பட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் கூடுதல் காவல்துறையினா் ஈடுபட்டனா். ஆனால் போக்குவரத்து சீரமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் பல இடங்களில் போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளானது. இதனால் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். நகராட்சி நிா்வாகம் சாா்பில் பக்தா்களின் வசதிக்காக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீா் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. சமூக ஆா்வலா்கள் பலரும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.