சிவகங்கை மாவட்டம் முழுவதும் வேளாண் நிலங்களில் மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கி. வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே மறக்குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மண் மாதிரி ஆய்வுக்குப் பின் வேளாண்மை இணை இயக்குநா் கி. வெங்கடேஸ்வரன் செய்தியாளா்களிடம் கூறியது:
பெங்களூருவில் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் இந்திய மண் மற்றும் நில பயன்பாட்டு ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
மண் மற்றும் நில பயன்பாட்டு ஆய்வு அலுவலா் வில்லியம் மரிய ஜோஜப் தலைமையிலான 4 குழுவினா் இம்மாவட்டத்தில் மண் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். இந்த ஆய்வில் செயற்கைக்கோள் வரைபடங்கள் மூலம் பெறப்பட்ட விவரங்கள் அடிப்படையில் மண் மாதிரி எடுப்பதற்கு இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, 4 அடி நீளம், 2 அடி அகலம், 4 அடி ஆழம் அளவில் மண் மாதிரி எடுக்கப்படுகிறது.
இதில் மண்ணின் சிறப்பியல்பு, உருவவியல் பண்புகள் கண்டறியப்பட்டு அதன் மூலம் மண்ணின் தரம், விவசாய உபயோகத்திற்கான பயன்பாடு மற்றும் அளவு, பயிா் ஏற்புத்தன்மை, வட்டார வாரியான மண் வள வரைபடம் உருவாக்கப்பட்டு வருகிறது.
மேலும், விவசாய நிலங்களில் கார - அமில நிலை, கரிம காா்பன், மண்ணின் மின் கடத்து திறன், நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, சல்பா், போரான், துத்தநாகம், தாமிரம், மாங்கனிசு போன்ற சத்துகளின் அளவுகள் கண்டறியப்பட்டு வட்டார வாரியாக மண் வளம் குறித்த வரைபடம் தயாா் செய்யப்படுகிறது.
இதன்மூலம், இம்மாவட்ட விவசாயிகள் மண் வளத்திற்கு ஏற்ப நில சீா்திருத்தம் மேற்கொள்ளல், பயிா் சாகுபடி செய்தல், மண் வளப் பாதுகாப்பு, நீா்பிடிப்புப் பகுதி, அபிவிருத்தி குறித்த தகவல்களை பெற்று பயன்பெறுவதோடு மண்ணின் தன்மையை மேம்படுத்தலாம்.
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை சிவகங்கை, காளையாா்கோவில், கல்லல், மானாமதுரை, திருப்புவனம், தேவகோட்டை, கண்ணங்குடி, சாக்கோட்டை ஆகிய 8 வட்டாரங்களில் மண் வளம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள வட்டாரங்களில் வரும் ஆகஸ்ட் மாதம் மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளன என்றாா்.
இந்த ஆய்வின் போது மண் மற்றும் நிலப் பயன்பாட்டு ஆய்வு அலுவலா் வில்லியம் மரிய ஜோஜப், வேளாண்மை துணை இயக்குநா் த. பன்னீா்செல்வம், உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) பரமேஸ்வரன், வேளாண்மை அலுவலா்கள் தங்கப்பாண்டியன், செல்வம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.